
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் தம்புளா சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு தினேஷ் சண்டிமல் மற்றும் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சண்டிமல் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 24 ரன்களுக்கும், கேப்டன் வநிந்து ஹசரங்கா 25 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே ஃபிளெட்சர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், ஒரு பவுண்டரி 7 சிக்ஸர்கள் என 60 ரனக்ளைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் - ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் கமிந்து மெண்டிஸ் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெண்டிஸ் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 51 ரன்களையும், ஏஞ்சலோ மேத்யூஸ் 5 சிக்ஸர்களுடன் 44 ரன்களையும் சேர்த்தனர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்களை சேர்த்தது. தம்புளா அணி தரப்பில் துஷன் ஹெமந்தா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரீஸா ஹென்றிக்ஸ் 2 ரன்களுக்கும், இப்ராஹிம் ஸத்ரான் ஒரு ரன்னிலும், லஹிரு உதானா 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.