
லங்கா பிரீமியர் லீக் (Lanka Premier League) கிரிக்கெட் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் அணியை எதிர்த்து ஜாஃப்னா கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தம்புளா சிக்ஸர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு தனுஷ்கா குணத்திலகா மற்றும் குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குணத்திலகா 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த குசால் பெரேரா - நுவனிந்து ஃபெர்னாண்டோ இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபெர்னாண்டோ 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் பெரேரா 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 102 ரன்களை விளாசினார். இதன்மூலம் தம்புளா சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்ததுடன் 191 ரன்களையும் குவித்தது. ஜாஃப்னா அணி தரப்பில் தனஞ்செயா டி சில்வா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.