
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் ஷெவான் டேனியல் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஷெவன் டேனியல் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரஹ்மனுல்லா குர்பாஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த முகமது வசீம் மற்றும் சமரவிக்ரமா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்ந்தது. இவர்களது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியானது முதல் 6 ஓவர்களிலேயே 78 ரன்களைக் குவித்தது.
இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட முகமது வசீம் 32 ரன்களிலும், சமரவிக்ரமா 48 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கிளென் பிலீப்ஸும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். ஆனாலும் அதன்பின் களமிறங்கிய கேப்டன் திசாரா பெரேரா 38 ரன்களையும், ஷதாப் கான் 20 ரன்களையும், கருணரத்னே 25 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைக் குவித்தது.