
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்ற இத்தொடரில் கலே மார்வெல்ஸ், ஜாஃப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் ஒன்றில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களை பிடித்திருந்த கலே மார்வெல்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கலே மார்வெல்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த குசால் மெண்டிஸ் - ரைலீ ரூஸோவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்திருந்த ரைலீ ரூஸோவ் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய சரித் அசலங்கா 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். ஆனாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ அரைசதம் கடந்த நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தனஞ்செயா டி சில்வா, ஃபேபியன் ஆலன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.