
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
காயம் காரணமாக கேஎல் ராகுல் இப்போட்டியில் விளையாடததால் அவருக்கு பதிலாக மனன் வொஹ்ரா அணியில் சேர்க்கப்பட்டு குர்னால் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ் - மனன் வொஹ்ரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேயர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, மனன் வொஹ்ரா 10 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் குர்னால் பாண்டியா முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் 6 ரன்களிலும், கரண் சர்மா 9 ரன்களிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் லக்னோ அணி 44 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.