
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெற்று குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதில் நாளை மறுநாள் நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த சீசனில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
லக்னோ அணியைப் பொறுத்தவரையில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளதால், வெற்றிப்பாதைக்கு திரும்ப தீவிரமாக உள்ளது. இதனால் சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்த லக்னோ அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இடம்பிடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.