
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொள்ள இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இதுவரை இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் அபார வெற்றியை பெற்றுள்ளது.
அதேபோல் வங்கதேச அணி 3 போட்டிகளில் 2 தோல்வி ஒரு வெற்றியுடன் களத்தில் இருக்கிறது. இந்திய அணியின் பலத்திற்கு வங்கதேச அணி ஈடு இல்லை என்றாலும், 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியால் இந்திய அணி வீழ்த்தப்பட்டது. அதன்பின்னர் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போட்டி சிறிய ரைவல்ரியாகவே பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது மட்டும் வங்கதேச அணி வீரர்கள் கூடுதல் ஆக்ரோஷத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஷாகிப் அல் ஹசனும் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். இதனால் வங்கதேச அணி வீரர்கள் கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். இதனால் நாளைய ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.