
கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மகாராஜா கோப்பை டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவ்றுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் ஷிவமொக்கா லையன்ஸ் மற்றும் மங்களூர் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மங்களூரு டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் படி களமிறங்கிய லையன்ஸ் அணியில் கேப்டன் நிஹால் உலால் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரோஹித் 24 ரன்களுக்கும், துருவ் பிரபாகர் 20 ரன்களுக்கும், ராஜ்விர் வத்வா 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த அபினவ் மனோஹர் - அவினாஷ் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அவினாஷ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சிவராஜும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபினவ் மனோஹர் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 3 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 84 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஷிவமொக்கா லையன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மங்களூர் டிராகன்ஸ் அணிக்கு மெக்னீல் ஹாட்லி - ரோஹன் பாட்டில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டதுடன, முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக்னீல் ஹாட்லி 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 43 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.