
கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் மஹாராஜா கோப்பை டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் மைசூர் வாரியர்ஸ் - மங்களூரு டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மங்களூரு டிராகன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மைசூர் அணியில் கார்திக் சிஏ 11, கார்த்திக் எஸ்யு 23 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் கருண் நாயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். ஒருபக்கம் கருண் நாயர் அதிரடியில் மிரட்ட, மறுபக்கம் களமிறங்கிய சமித் டிராவிட் 16 ரன்களுக்கும், சுமித் குமார் 15 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். ஆனால் தொடர்ந்து அபாரமாக விளையாடிய கருண் நாயர் சதமடித்து அசத்தியதுடன் 13 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 123 ரன்களைச் சேர்த்து மிரட்டினார்.
அவருக்கு துணையாக விளையாடிய மனோஜும் 31 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் மைசூர் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களைச் சேர்த்தார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மங்களூரு டிராகன்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து தடுமாறியது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.