
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி . இந்திய அணிக்காக இரண்டு உலகக் கோப்பை மற்றும் ஒரு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று தந்த ஒரே கேப்டன் இவர்தான். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று போட்டிகளிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் .
அவர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக 2007 ஆம் ஆண்டு தொடங்கி 2017 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார். இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை கேப்டனாக வழிநடத்தியுள்ளார். அதன்பின், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணியில் அறிமுகமாகினர்.
இந்த நிலையில், பந்துவீச்சாளர்களை சிறப்பாக உருவாக்கி ஒரு முழுமையான அணியை விராட் கோலியிடம், மகேந்திர சிங் தோனி ஒப்படைத்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.