
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்து போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனெவே இங்கிலாந்து அணி தொடரில் பின் தங்கியுள்ளதால், இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறுவதற்காக அந்த அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
இருப்பினும் அந்த அணியில் ஒருசில வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறிவருகின்றனர். அதிலும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கடந்த ஓராண்டாகவே பந்துவீசாமல் ஒரு பேட்டராக மட்டுமே விளையாடி வருகிறார். இது இங்கிலாந்து அணிக்கும் மிகப்பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் தற்போது பந்துவீச்சு பயிறியில் ஈடுபட்டு வருவதாகவும், 4ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் பந்துவீச வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.