
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்று வரும் 63ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய இரு அணிகளும் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் தீபக் ஹூடா 5 ரன்னிலு, அடுத்து வந்த பிரேரக் மன்கட் அடுத்த பத்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். போதாக்குறைக்கு மறுபுறம் தடுமாறிய குயிண்டன் டீ காக் 2 பவுண்டரியுடன் 16 ரன்களில் பியூஸ் சாவ்லா சுழலில் சிக்கியதால் 35/3 என ஆரம்பத்திலேயே லக்னோ தடுமாறியது. அந்த நிலைமையில் ஜோடி சேர்ந்த கேப்டன் குர்னால் பாண்டியா – மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் நிதானமாக செயல்பட்டு சரிவை சரி செய்ய போராடினர்.
அதில் ஒருபுறம் குர்னால் பாண்டியா நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் சவாலான பிட்ச்சில் கூட தமக்கே உரித்தான பாணியில் அதிரடியாக செயல்பட்ட ஸ்டோய்னிஸ் மும்பை பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்து லக்னோவை சரிவிலிருந்து காப்பாற்றினார். இருப்பினும் 42 பந்துகளை எதிர்கொண்டும் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்த பாண்டியா கடைசி நேரத்தில் லேசான காயத்தை சந்தித்து மேற்கொண்டு விளையாடாமல் பாதியிலேயே வெளியேறினார்.