
ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 26ஆம் தேதியன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் ஆசிய சாம்பியன் இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. அதில் தன்னுடைய முதல் போட்டியில் நியூசிலாந்திடம் படு தோல்வியை சந்தித்ததால் சொந்த மண்ணில் கோப்பையை தக்கவைக்க வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 157/6 ரன்கள் சேர்த்தது. அதை தொடர்ந்து 158 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா கட்டுக்கோப்பாக பந்து வீசிய இலங்கையை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பத்திலேயே திணறியது. குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் 11 ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் தடுமாறி 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் ரொம்பவே தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக களமிறங்கி 2 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்ட கிளன் மேக்ஸ்வெல் 23 ரன்களை குவித்து நம்பிக்கை கொடுத்தாலும் மீண்டும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டானார்.
ஆனாலும் அவர்களை விட மறுபுறம் ஆட்டமிழக்காமல் இருந்த மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் வெறும் 1 சிக்சருடன் 42 பந்துகளில் 31 ரன்களை மட்டுமே எடுத்தார். ஆனால் அவருடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் இலங்கை பவுலர்கள் சுத்தியலால் அடித்தது போல் சரமாரியாக அடித்து நொறுக்கினார் என்றே கூறலாம்.