
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக இத்தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது. இதனையடுத்து அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக அந்த அணியின் அடுத்த கேப்டனை நியமிக்கும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது அந்த அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக 4 மாதங்களுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது, இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டது.