
தற்போது சர்வதேச கிரிக்கெட்டின் இரண்டு வடிவத்திலும் (ஒருநாள் & டி20) உலக சாம்பியனாக இங்கிலாந்து இருந்து வருகிறது. அவர்களின் அதிரடியான ஆட்ட அணுகுமுறை, மற்றும் பேட்டிங் நீளத்தை அதிகரிப்பதற்காக ஆல்ரவுண்டர்களை உருவாக்குவது என்று நிறைய முன்னேறி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு,இங்கிலாந்து கிரிக்கெட்டின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் ஓய்வு அறிவிப்பை ரத்து செய்ய வைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது.
இந்த நிலையில் அவர் காலில் ஏற்பட்ட ஒரு சிறிய காயத்தின் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை துவக்க ஆட்டத்தில் இடம்பெறவில்லை. அந்த நேரத்திலேயே இங்கிலாந்து அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று பலராலும் கூறப்பட்டது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சரியான அணுகுமுறையை கையாளாமல் சொதப்பி 282 ரன்களுக்கு சுருண்டது. அந்த ஆடுகளத்தில் இது குறைந்த ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கிலாந்து அணி பந்து வீச்சுக்கு திரும்ப வந்து நியூசிலாந்து அணியின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி 36 ஓவர்களில் இலக்கை எட்ட விட்டு நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்தது. இதன் காரணமாக அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது குறித்து நிறைய விவாதங்கள் உருவாகின.