
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக மோதுகின்றன. பொதுவாக இந்திய அணியினர் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாட பழகியதால் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மைதானங்களில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது வழக்கமாகும்.
அதனாலேயே அங்கு 2007க்குப்பின் 15 வருடங்களாக ஒரு டெஸ்ட் தொடரில் கூட வெல்லாமல் இந்தியா தவித்து வருகிறது. மறுபுறம் வேகத்துக்கு சாதகமான மைதானங்களில் விளையாடப் பழகிய ஆஸ்திரேலியர்களுக்கு சுழலுக்கு சாதகமான இந்தியாவில் விளையாடுவதை விட இங்கிலாந்தில் விளையாடுவது சாதகமான ஒன்றாகும். ஏனெனில் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவில் இருக்கும் மைதானங்களைப் போன்ற தன்மையும் கால சூழ்நிலையும் தான் இங்கிலாந்தில் இருக்கும் மைதானங்களில் காணப்படும்.
அப்படிப்பட்ட நிலையில் இப்போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானம் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகிய ஐசிசி தரவரிசையில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களையும் மிட்சேல் ஸ்டார்க், பட் கமின்ஸ், ஹேசல்வுட் போன்ற தரமான பவுலர்களையும் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு பொருந்தக்கூடிய ஒன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை விட ஓவல் மட்டும் தான் இந்தியாவுக்கு மிகவும் பிடித்த சுழலுக்கு சாதகமாக இருக்கும் வரலாற்றைக் கொண்டுள்ளது.