
இந்திய கிரிக்கெட் வீரரும், உள்ளூர் போட்டிகளில் கர்நாடகா அணியின் கேப்டனுமாக செயல்பட்டு வருபவர் மயங்க் அகர்வால். இந்திய அணிக்காக இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் 4 சதம், 6 அரைசதங்களுடன் 1500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொரில் கர்நாடகா அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தன் அணியினருடன் அகர்தலாவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் செல்ல விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது விமானத்தில் குடிநீர் கொண்டு வருமாறு கேட்க, அதனை குடித்த சிறிது நேரத்திலேயே அவருக்கு வாய் மற்றும் தொண்டை பகுதியில் எரிச்சல் ஏற்பட்டு, அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த மயங்க் அகர்வால், தற்போது குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். அதன்படி தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் பங்கேற்கும் அவர், அப்போட்டியில் கர்நாடகா அணியை கேப்டனாகவும் வழிநடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாடு மற்றும் கர்நாடாக அணிகள் மோதும் இப்போட்டியானது பிப்ரவரி 09ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.