ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் மயங்க் யாதவ்?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த லக்னோ அணி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது லக்னோ அணி தரப்பில் பந்துவீசிய மயங்க் யாதவ், தனது 4ஆவது ஓவரை வீசிய போது காயமடைந்து பெவிலியனுக்கு திரும்பினார். ஏற்கெனவே நடப்பு ஐபிஎல் தொடரில் காயத்தை சந்தித்திருந்த மயங்க் யாதவ், சில போட்டிகளில் விளையாடமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் தனது காயத்திலிருந்து மீண்டு நேற்றைய லீக் போட்டியில் பங்கேற்றார்.
Trending
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான அந்த போட்டியில் 3.1 ஓவர்களில் 31 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றிய மயங்க் யாதவ், மீண்டும் காயத்தை சந்தித்ததுடன் பெவிலியனுக்கும் திரும்பினார். இதனால் அந்த ஓவரின் மீதமிருந்த பந்துகளை மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக் வீசினார். இதையடுத்து மயங்க் யாதவின் காயம் குறித்து எந்த தகவலும் வெளியாகமல் இருந்த நிலையில், அவர் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்தே விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியின் போது மயங்க் யாதவிற்கு தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அது முதல்நிலை காயம் தான் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது காயம் குணமடைய சில காலம் எடுக்கும் என்பதால் அவர் முழு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவது சந்தேகம் தான் என கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், பிளே ஆஃப் சுற்றில் மட்டுமே மயங்க் யாதவ் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தற்போது உள்ள நிலையில் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை மயங்க் யாதவ் தொடரிலிருந்து விலகும் பட்சத்தில் அது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now