
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வந்த ஜிம்பாப்வே அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்துள்ளன.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணியில் ஷாத்மான் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோரின் சதத்தின் மூலம் 444 ரன்களைக் குவித்ததுடன், 217 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியானது 111 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய மெஹிதி ஹசன் மிராஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.