
இந்தியாவில் இன்னும் சில தினங்களில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக தகுதிபெற்ற அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ஜாம்பவான் அணிகளாக கருதப்படும் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் ஆஃப்கானிஸ்தான் வளர்ந்துள்ளதை சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம்.
உள்நாட்டு போருக்கு இடையே, ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி எட்டி உள்ள உயரங்கள் மிகவும் அசாதாரணமான ஒன்று. கிரிக்கெட்டில் இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி சுற்றில் விளையாடும் பொழுது, ஆஃப்கானிஸ்தான் அணி கடந்த சில உலகக் கோப்பைகளாக நேரடியாக தகுதி பெற்று அசத்தி வருகிறது.
மேலும் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் உலகெங்கும் நடக்கும் டி20 தொடர்களில் நல்ல மதிப்புடையவர்களாக விளங்கி விளையாடி வருகிறார்கள். அவர்களுடைய தேவை உலக டி20 கிரிக்கெட் தொடர்களுக்கு இருக்கிறது என்பது அவர்களுடைய வளர்ச்சிக்கான சான்று. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் அடையாளமாக ரஷித் கான் இருந்து வருகிறார்.