
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் திடீரென சுமாராக மாறியதும், ஏற்கனவே தொடர்ச்சியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்குள் இருந்து வரும் அரசியலும், தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட்டை மிகவும் சிக்கலாக மாற்றி இருக்கிறது.
பாபர் ஆசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி உள்நாட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது வரை, வெற்றிகள் வந்து கொண்டிருக்கும் வரை,பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மற்றும் அணிக்குள் இருந்த பிரச்சனைகள் வெளியில் தெரியாமல் இருந்து வந்தன. மேலும் நிலைமைகள் சுமுகமாக இருப்பது போல தோன்றின.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பைத் தொடர் விளையாட இலங்கை வந்த பிறகு, குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை விளையாட வந்ததும், பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டு தோல்வி வர ஆரம்பித்ததும், பாகிஸ்தான் அணிக்குள் மற்றும் அமைப்புக்குள் இருந்த பிரச்சனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்தன.