
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுவித்த இந்தியா முதல் அணியாக செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 88, கில் 92, ஸ்ரேயாஸ் 82 ரன்கள் எடுத்த உதவியுடன் 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
ஆனால் அதை சேசிங் செய்த இலங்கை முதல் பந்திலிருந்தே இந்தியாவின் அனல் பறந்த பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதனால் அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதனால் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியா வென்றுள்ளதால் நிச்சயம் இம்முறை 2011 போல கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வலுவான பேட்டிங், பவுலிங் செயல்பாடுகளால் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வரும் இந்தியா இரக்கமற்ற அணியாக மாறியுள்ளதாக சோயப் அக்தர் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.