
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 47, கில் 80, விராட் கோலி 117, ராகுல் 39 ரன்கள் எடுத்த உதவியுடன் 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு முக்கிய வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் முடிந்தளவுக்கு போராடியும் 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதிகபட்சமாக டெரில் மிட்சேல் 134, கேப்டன் வில்லியம்சன் 69 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்களை சாய்த்தார்.
அந்த வகையில் ஐசிசி நாக் அவுட் போட்டியில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடிக்க உதவி 7 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற முகமது ஷமி தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வருகிறார். அதே போல சச்சினை முந்தி 50 சதங்கள் அடித்து நிறைய உலக சாதனைகள் படைத்த விராட் கோலியும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியதாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.