SA20: பிரீவிஸ் காட்டடி; வெற்றியை ருசித்தது எம் ஐ கேப்டவுன்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
ஐபிஎல் தொடரைப் போன்றே தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் அந்த நாட்டில் டி20 கிரிக்கெட் போட்டி முதல்முறையாக நடத்தப்படுகிறது. இத்தொடர் நேற்று தொடங்கி அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நடக்கிறது.
அதன்படி நேற்று நடைபெற்றமுதல் போட்டியில் ரஷித் கான் தலைமையிலான எம் ஐ கேப்டவுன் அணி டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள எம் எஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
Trending
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - விஹான் லூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லூப் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜேசன் ராய் 13 ரன்களிலும், டேன் விலாஸ் 6 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் - டேவிட் மில்லர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஜோஸ் பட்லர் தனது அரைசதத்தைப் பூர்த்திசெய்த கையோடு, 42 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் மில்லருடன் ஜோடி சேர்ந்த ஈயான் மோர்கனும் ஒருசில பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் கணிசமாக உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய மில்லர் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களில் ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பார்ல் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களைச் சேர்த்தது. எம் ஐ கேப்டவுன் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய எம் ஐ கேப்டவுன் அணிக்காக டெவால்ட் பிரீவிஸ் - ரியான் ரிகெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடக்க, மறுமுனையில் இருந்த ரிகெல்டன் 42 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாம் கரன் 20 ரன்களோடு ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் 41 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரிகள் என 70 ரன்களைச் சேர்த்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் 15.3 ஓவர்களில் எம் ஐ கேப்டவுன் அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபாரவெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now