
மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் ஆக இருந்தாலும் அது அம்பானியின் அணி என்பதால் அதனை வைத்து ரசிகர்கள் கிண்டல் செய்வது வழக்கம். உதாரணத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போது நடுவர்கள் அவர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழும். இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதி கொண்டுவரப்பட்டது.
இதில் போட்டிக்கு முன்பு நான்கு வீரர்களை தேர்வு செய்து விட்டு ஏதேனும் ஒருவரை போட்டியின் போது மாற்றிக் கொள்ளலாம். பிளேயிங் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் இம்பேக்ட் வீரராக வெளிநாட்டு வீரரை பயன்படுத்த முடியாது. இந்த நிலையில் மும்பை அணி குவாலிஃபையர் இரண்டாவது ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. பிறகு பேட்டிங் செய்ய வந்தபோது பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலை மாற்றி இம்பேக்ட் வீரராக நெஹல் வதேரா அணிக்குள் வந்தார்.
ஆனால் இரண்டாவது வீரராக இஷான் கிஷணுக்கு பதில் விஷ்ணு வினோத் பேட்டிங் செய்ய மாற்று வீரராக வந்தது ரசிகர்களை குழப்பம் அடையச் செய்தது. அது என்ன மும்பை அணிக்கு மட்டும் தனி சலுகையா என ரசிகர்கள் கேட்டனர். ஆனால் உண்மையில் பில்டிங் செய்யும் போது விக்கெட் கீப்பர் இஷான் கிஷனுக்கு காயம் ஏற்பட்டுவிட்டது.