ஒரு போட்டியை வைத்து ரோஹித் மோசமான கேப்டன் என்று கூற முடியாது -மைக்கேல் கிளார்க்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த காரணத்தால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மோசமான கேப்டனாக என்று சொல்ல முடியாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து ரசிகர்கள் கேப்டன் ரோஹித் சர்மாவை தீவிரமாக விமர்சித்து வருகின்றனர். ரோஹித் சர்மாவை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக தொடரக் கூடாது என்று காட்டமாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வருவதால், பிசிசிஐ எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.
உலகக்கோப்பைத் தொடரின் முடிவை பொறுத்தே இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மாவை தொடரலாமா என்று முடிவு எடுக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை தொடர வேண்டும் என்று ஆதரவு அளித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய மைக்கில் கிளார்க், “என்னை பொறுத்தவரை ரோஹித் சர்மா சிறந்த கேப்டன். எனக்கு அவரின் தீவிரத்தன்மை பிடித்திருக்கிறது. அதேபோல் களத்தில் எப்போதும் பாசிட்டிவாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு கேப்டனாக ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தோல்வியடைந்தார் என்பதற்காக, அவர் கேப்டன்சிக்கு தகுதியானவர் இல்லை என்று ஆகிவிடாது. ஏனென்றால் தொடர்ச்சியாக இருமுறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது.
இந்திய அணி எந்த அளவிற்கு சிறப்பாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி இருக்கிறது என்பது இதன் மூலமாக அறியலாம். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. ஏற்கனவே அவர் கேப்டனாக உள்ளூரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நிரூபித்துள்ளார். அதேபோல் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒரேயொரு போட்டியில் தோல்வியடைந்ததால், அவர் மோசமான கேப்டன் என்று சொல்ல முடியாது. முடிவு எடுப்பதற்கு முன்பாக அனைத்தையும் பார்த்த பின்னர், முடிவு செய்வது சிறந்தது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now