
2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மோசமான தோல்விகளை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில், அந்த அணியில் விரிசல் இருக்கலாம் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் இயான் மார்கன், மைக்கேல் வான் போன்றோர் கூறி இருந்தனர்.
அதன் பின்னணியில் சம்பள ஒப்பந்த விவகாரம் இருக்கலாம் என கூறப்பட்டு வந்தது. அந்த சம்பள ஒப்பந்தப் பிரச்சனைக்கு ஆரம்பப் புள்ளியே ஐபிஎல் அணிகள் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடருக்கு சில மாதங்கள் முன்பிருந்து வீரர்களை தேர்வு செய்து வந்தது. குறிப்பாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போதே இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு சிக்கல் இருந்தது.
பல முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்று இருந்தனர். பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி போன்றோர் ஓய்வு பெற்ற நிலையில் தங்கள் ஓய்வில் இருந்து மீண்டு வந்து அணியில் இணைந்தனர். அவர்கள் ஓய்வு பெற மறைமுகமான காரணம் ஐபிஎல் தான். தற்போது ஐபிஎல் அணிகள், இந்தியாவில் மட்டுமல்லாது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இன்டர்நேஷனல் டி20 தொடர், தென்னாப்பிரிக்கா டி20 தொடர் ஆகியவற்றிலும் அணிகளை சொந்தமாக வைத்துள்ளன.