
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்து உலக கோப்பைகளை குவித்துவருகிறது இங்கிலாந்து அணி. அதேவேளையில், இந்திய அணி சரிவை சந்தித்துள்ளது. இந்திய அணி இருதரப்பு, முத்தரப்பு தொடர்களில் நன்றாக ஆடி வெற்றிகளை குவித்தாலும், ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்துவருகிறது.
இந்திய அணிக்கு 2007இல் டி20 உலக கோப்பை, 2011இல் ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013இல் சாம்பியன்ஸ் டிராபி என 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் தோனி வென்று கொடுத்தார். கடைசியாக தோனியின் கேப்டன்சியில் 2013இல் வென்ற சாம்பியன்ஸ் கோப்பை தான் கடைசி ஐசிசி கோப்பை. அதன்பின்னர் இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை.
2014, 2016, 2021, 2022ஆம் ஆண்டுகளில் டி20 உலக கோப்பைகளில் தோல்வியை தழுவியது. 2015 ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2019 ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 தொடர்களிலும் அரையிறுதியில் தோற்று வெளியேறியது. 2017இல் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று தொடரை இழந்தது.