
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களுடைய 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் இந்தியாவிடம் சந்தித்த தோல்வியிலிருந்து மீளாத பாகிஸ்தான் முக்கிய கேட்ச்களை கோட்டை விட்டு அடுத்தடுத்த தோல்விகளை பதிவு செய்து மீண்டும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
முன்னதாக அஹ்மதாபாத் நகரில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 154/2 என்ற நல்ல துவக்கத்தை பெற்ற பாகிஸ்தான் அதன் பின் இந்தியாவின் நெருப்பான பந்து வீச்சில் சீட்டுக்கட்டு போல சரிந்து 191 ரன்களுக்கு படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த தோல்விக்கு பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் சொன்ன காரணம் இப்போது வரை சர்ச்சையாகவும் சிரிப்பை ஏற்படுத்துவதாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.
அதாவது இந்தியா அசத்திய தருணங்களில் “சக்தே இந்தியா” எனும் உத்வேக பாடல் அகமதாபாத் மைதானத்தில் ஒலிபரப்பப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அசத்திய தருணங்களில் “தில்தில் பாகிஸ்தான்” பாடல் ஒலிபரப்பப்படவில்லை என்று விமர்சித்த அவர் இது ஐசிசிக்கு பதிலாக பிசிசிஐ நடத்தும் இருதரப்பு தொடரை போல் இருப்பதாக தெரிவித்திருந்தார். எனவே அந்த உத்வேகம் இல்லாதது தோல்வியில் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்த அவர் இவை அனைத்திற்கும் ஃபைனலுக்கு வந்து பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்திருந்தார்.