
நடப்பாண்டுக்கான 15ஆவது சீசன் ஐபிஎல் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 60 சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 10 போட்டிகளே உள்ளது. இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டி பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலிக்கு சோதனைக் காலமாக அமைந்துள்ளது. ரன் மிஷின், கிங் கோலி என்று அழைக்கப்பட்ட விராட் கோலி, கடந்த இரண்டு வருடங்களாக ஃபார்மில் இல்லாதநிலையில், இந்திய அணி மற்றும் ஐபிஎல் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை இழந்தார்.
எனினும், அதன்பிறகு பழைய ரன் மிஷின் விராட் கோலியை பார்க்கலாம் என்றால் பேட்டிங்கில் ரன் குவிக்க முடியாமல் திணறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து வருகிறார். குறிப்பாக எதிர் அணி வீரர்களும் விராட் கோலியின் பேட்டிங்கை கண்டு பயப்படும் நிலையில் இருந்துவந்த நிலையில், தற்போது அரைசதம் எடுப்பதற்கே கோலி திணறுவது, வியப்பாக உள்ளது. அதுவும் ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட வெல்லவில்லை என்றாலும், பெங்களூரு அணியில் ரன்கள் குவித்து சாதனை செய்யும் தன்னுடைய பொறுப்பிலிருந்து கோலி விலகியதே இல்லை.
ஆனால் தற்போது, இந்த சீசனில் விராட் கோலி 3 முறை டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்துள்ளார். அதிலும் கடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் 3-வது முறையாக டக் அவுட்டானதும் என்னசெய்வது என்றே தெரியாமல் விரக்தியில் சிரித்துக்கொண்டே சென்றார். இதேபோல்தான் நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில், முதலில் சிறப்பாக விளையாடியதால் பழைய கிங் கோலியை பார்க்கலாம் என நினைத்தநிலையில், ரபாடா வீசிய 4-வது ஓவரில் விராட் கோலி, 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.