ENG vs IND, 5th Test: இந்திய அணியின் பெரிய பலம் இதுதான் - முகமது சிராஜ்!
மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பது சாதகமாக உள்ளதாக முகமது சிராஜ் கூறியுள்ளார்.
பிர்மிங்கமில் நடைபெற்று வரும் 5ஆவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சதமடித்த பேர்ஸ்டோவ், 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
சிராஜ் 4, பும்ரா 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. பும்ரா 50, ரிஷப் பந்த் 30 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
Trending
5ஆவது டெஸ்ட் பற்றி பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், “பேர்ஸ்டோவ் சமீபகாலமாக நன்றாக விளையாடி வருகிறார். அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். எனவே அவருடைய ஆட்டத்தின்போது பொறுமை காத்தோம். எங்களுடைய திறமை மீது நம்பிக்கை இருந்தது.
மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் பலர் இந்திய அணியில் இருப்பது எங்களுக்குச் சாதகமாக உள்ளது. நியூசிலாந்து - இங்கிலாந்து தொடரைப் பார்த்தபோது அந்த அம்சம் அவர்களிடம் இல்லாமல் இருந்ததைக் கவனிக்க முடிந்தது. கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதால் அவர்களுடைய பலவீனங்களை அறிந்து வைத்திருந்தோம். அதனால் தான் நன்கு பந்துவீச முடிந்தது.
2ஆவது நாளன்று அடிக்கடி மழை பெய்தததால் பந்துவீச்சாளர்களுக்குப் போதிய ஓய்வு கிடைத்தது. ஆடுகளத்தில் பந்து எகிறுவது குறைந்துள்ளது. இது இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல செய்தி. பந்து நன்கு ஸ்விங் ஆனபோது ஆஃப் ஸ்டம்புக்கே வெளியே பந்துவீசினேன். ஆனால் ஸ்விங் ஆவது குறைந்தபோது ஸ்டம்புக்கு நேராகப் பந்துவீசத் தொடங்கினேன்.
ஐபிஎல் போட்டிக்குப் பிறகு என்னுடைய பலமாக இருந்த அவுட் ஸ்விங்கை இழந்துவிட்டேன். எனவே பந்தை ஸ்விங் செய்வதற்குக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அவுட் ஸ்விங் வீசுவது பார்க்க நன்றாக இருந்தாலும் அதனால் நிறைய விக்கெட்டுகள் கிடைக்காது. எனவே இன்ஸ்விங் பந்திலும் கவனம் செலுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now