
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 367 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 121 ரன்களும் விளாசினர். அதேபோல் பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. பாகிஸ்தான் அணி தரப்பில் இமாம் உல் ஹக் 70 ரன்களும், அப்துல்லா ஷஃபிக் 64 ரன்களும் விளாசினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 2ஆவது வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் புள்ளிப்பட்டியலிலும் ஆஸ்திரேலிய அணி 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இத்தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.