ஐபிஎல் 2022: மிட்செல் மார்ஷ் விளையாடுவது சந்தேகம்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகியுள்ளதாக அந்த நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் ஏற்கெனவே முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் இந்தத் தொடர்களில் விளையாடவில்லை. கேன் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
Trending
இந்நிலையில் மிட்செல் மார்ஷும் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதும் சந்தேகமாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் மிட்செல் மார்சை ரூ.6.50 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் அவரது காயம் டெல்லி அணிக்கும் பெரும் இழப்பாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி:ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் அபாட், அஷ்டன் அகார், ஜேசன் பெரென்டர்ஃப், அலெக்ஸ் கேரி, பென் ட்வார்ஷியுஸ், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், பென் மெக்டெர்மாட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், ஆடம் ஸாம்பா.
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 29, 31 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஒரேயொரு டி20 ஆட்டம் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now