
நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2- 1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
நியூசிலாந்தில் நடைபெற்றவுள்ள இத்தொடரானது எதிர்வரும் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 11ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் அனைத்து வடிவிலான நியூசிலாந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து டெஸ்ட் அணியின் கேப்டனாக டாம் லேதம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை தொடரில் மிட்செல் சான்ட்னர் டி20 அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார்.