
உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெறுகிறது. இந்த ஆடுகளம் பேட்ஸ்மன்களுக்கு சொர்க்கம் என்று அழைக்கப்படக்கூடிய அளவுக்கு ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும்.
மேலும் இந்திய அணி சொந்த மண்ணில் புலியாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் மட்டும் எலியாகவே இருந்திருக்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் யாரேனும் உலகக் கோப்பை தொடருக்கு முன்பு ஃபார்ம்க்கு வர வேண்டும் என நினைத்தார்கள் என்றால் அவர்கள் முதலில் விளையாட வேண்டியது இந்த மொஹாலி ஆடுகளத்தில் தான். அந்த அளவுக்கு பேட்ஸ்மன்களுக்கு சாதகமாகவும் பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாகவும் இந்த மைதானம் இருக்கிறது.
தனிப்பட்ட முறையில் இந்திய அணி இங்கு சிறப்பாக விளையாடினாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் தடுமாறி இருக்கிறது. இதுவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐந்து முறை மொஹாலில் மோதியிருக்கிறார்கள். இதில் இந்திய அணி ஒருமுறை மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறது. எஞ்சிய நான்கு முறையும் ஆஸ்திரேலியா அணியே வென்றிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்திய அணி மொஹாலியில் கடைசியாக ஆஸ்திரேலியாவிடம் 1996 ஆம் ஆண்டு தான் ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.