
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். மேலும் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் நியமிக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதேசமயம் இந்த ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கன்னொலி சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அறிமுக வீரரான மஹ்லி பியர்ட்மேன் அணியின் கூடுதல் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்றைய அறிவித்துள்ளது. ஏனெனில் ஸேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ரைலீ மெரிடித், ஸ்பென்ஸர் ஜான்சன் உள்ளிட்டோர் காயமடைந்ததன் காரணமாக இந்த முடிவானது எடுகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.