எம்எல்சி 2023 குவாலிஃபையர் 2: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸிற்கு எதிரான எம்எல்சி குவாலிஃபையர் ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூயார்க் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய டெக்ஸாஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஃபாஃப் டூ பிளெசிஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம்ளித்தார். அதன்பின் களமிறங்கிய மிட்செல் சாண்ட்னர் 6, கோடி செட்டி 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த கான்வே - மிலிந்த் குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
பின் 37 ரன்களில் மிலிந்த் குமாரும், 38 ரன்களில் டெவான் கான்வேவும் ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூயார்க் அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூயார்க் அணியில் ஸ்லெட் வான் 6 ரன்களுக்கும், நிகோலஸ் பூரன் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஷயான் ஜஹாங்கீர் 36 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டெவால்ட் ப்ரீவிஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
அவருக்கு துணையாக விளையாடிய டிம் டேவிட் 4 சிக்சர்களை விளாசி 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெவால்ட் ப்ரீவிஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நியூயார்க் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெக்ஸாஸ் அணியையும் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் எம்ஐ நியூயார்க் அணி மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியதியுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி சியாட்டில் ஆர்காஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now