எம்எல்சி 2023: பிளே சுற்றுக்கு முன்னேறியது டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்!
சான்பிரான்ஸிஸ்கோ அணிக்கெதிரான லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் சான்பிரான்ஸிஸ்கோ யுனிகார்ன்ஸ் - டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சான்பிரான்ஸிஸ்கோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி கலமிறங்கிய அந்த அணியில் ஃபின் ஆலன், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஷதாக் கான், கோரி ஆண்டர்சன் ஆகியோரு சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ வேட் 49 ரன்களில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Trending
பின்னர் சைத்தன்யா பிஷ்னோய் அதிரடியாக விளையாடி 35 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சான்பிரான்ஸிஸ்கோ அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. டிஎஸ்கே அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளையும், டேனியல் சாம்ஸ், மிட்செல் சாண்ட்னர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டூ பிளேசிஸ், கோடி செட்டி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த டெவான் கான்வே - மிலிந்த் குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கான்வே 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்த மிலிந்த் குமார் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் டேனியல் சாம்ஸ் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 42 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் சான்பிரான்ஸிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now