
உலகெங்கிலும் டி20 கிரிக்கெட் தொடரின் மீதான ஈர்ப்பின் காரணமாக அனைத்து நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றன. அந்தவகையில் அமெரிக்க கிரிக்கெட் சங்கம் தரப்பில் கிரிக்கெட்டை வளர்க்கும் முயற்சியில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடரை கடந்த ஆண்டு தொடங்கியது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த சீசனிற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இத்தொடரின் இரண்டாவது சீசனானது இன்று கோலாகலமாக தொடங்கியது.
இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும், இரண்டாம் இடம் பிடித்திருந்த சியாட்டில் ஆஸ்கர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி மோரிஸ்வில்லேவில் உள்ள சர்ச் ஸ்ட்ரீட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூயார்க் அணி முதலில் பந்துவிசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சியாட்டில் அணிக்கு டி காக் மற்றும் நௌமன் அன்வர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நௌமன் அலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து குயின்டன் டி காக்கும் 5 ரன்களோடு நடையைக் கட்டினார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் ஜோன்ஸ் 12 ரன்களுக்கும், ஹென்ரிச் கிளாசென் 5 ரன்களுக்கும், இமாத் வசிம் 3 ரன்களிலும், மைக்கேல் பிரேஸ்வெல் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுபம் ரஞ்சனே 35 ரன்களுக்கும், ஹர்மீத் சிங் 20 ரன்களிலும் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக சியாட்டில் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூயார்க் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.