
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சியாட்டில் ஆர்காஸ் அணியில் ரியான் ரிக்கெல்டனை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் காரணமாக சியாட்டில் ஆர்காஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கெல்டன் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 89 ரன்களைச் சேர்த்தார். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ஸ்பென்ஸர் ஜான்சன், ஆண்ட்ரே ரஸல், கோர்ன் டிரை, சுனில் நரைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியிலும் உன்முக்த் சந்த் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் அவரைத்தவிர்த்து ஜேசன் ராய், சுனில் நரைன், டேவிட் மில்லர், நிதிஷ் குமார் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உன்முக்த் சந்த் அரைசதம் கடந்ததுடன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தாலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இருப்பினும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கெல்டன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.