
அமெரிக்காவின் டி20 லீக் தொடரான மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நாடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடரஸ் அணியானது வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக உன்முக்த் சந்த் அரைசதம் கடந்ததுடன் 68 ரன்களைச் சேர்த்தார். சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஸியா உல் ஹக், முகமது மொஹ்சின், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர் டெவான் கான்வே அரைசதம் அடித்து அசத்தியதுடன் 53 ரன்களைக் குவித்தார்.
ஆனால் அவரைத்தவிர்த்து மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அலி கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.