
அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மொரிஸ்வில்லேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூயார்க் அணிக்கு ரூபென் கிளிண்டன் - மொனாங்க் படேல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மொனாங்க் படேல் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜஹாங்கீர் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஆதேசமயம் நிதானமாக விளையாடி வந்த மொனாங்க் படேல் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிம் டேவிட் 9 ரன்களுக்கும், கேப்டன் கீரென் பொல்லார்ட் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்கம், மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ரஷித் கான் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்தாலும், மற்ற வீரர்கள் யாரும் போதிய ரன்களைச் சேர்க்கவில்லை.