MLC 2025: எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதமடித்ததன் மூலம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் ரோஹித் சர்மா சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 103 ரன்களையும், டோனவன் ஃபெரீரா 53 ரன்களையும் சேர்க்க, அந்த அணி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் தரப்பில் ஜார்ஜ் லிண்டே, ருஷில் உகர்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய எம்ஐ நியூயார்க் அணியில் அதிகபட்சமாக கீரன் பொல்லர்ட் 70 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதன் காரணமாக எம்ஐ நியூயார்க் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே சேர்த்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் நியூயார்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.