
Kieron Pollard Record: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் எம்ஐ நியூயார்க் அணிக்காக விளையாடிய கீரன் பொல்லார்ட் அரைசதம் கடந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை முறியடித்துள்ளார்.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் எம்ஐ நியூயார்க் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது நடப்பு எம்எல்சி தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சூப்பர் கிங்ஸ் அணியின் அகீல் ஹொசைன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதேசமயம் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூயார்க் அணியின் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் கீரன் பொல்லார்ட் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை முறியடித்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.