
MLC 2025 Eliminator: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி வெற்றி பெற்றதுடன் சேலஞ்சர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மேத்யூ ஷார்ட் தலைமையிலான சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் மேத்யூ ஷார்ட் 6 ரன்களிலும், டிம் செஃபெர்ட் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 4 ரன்களிலும், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 5 ரன்னிலும், ஹசான் கான் ரன்கள் ஏதுமின்றியும், ஹம்மத் அசாம் 11 ரன்னிலும், கூப்பர் கன்னொலி 23 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் சேவியர் பார்ட்லெட் 44 ரன்களையும், பிராடி கோச் 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் யூனிகார்ன்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூயார்க் அணி தரப்பில் ருஷில் உகர்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.