
MLC 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி வெற்றி பெற்றதுடன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய எம்ஐ நியூயார்க் அணிக்கு மொனாங்க் படேல் மற்றும் குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மொனாங்க் படேல் 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய தஜிந்தர் தில்லான் 14 ரன்களுக்கும், கேப்டன் நிக்கோலஸ் பூரன் 21 ரன்னிலும் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த குயின்டன் டி காக் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் குன்வர்ஜீத் சிங் 22 ரன்களைச் சேர்க்க எம்ஐ நியூயார்க் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. வாஷிங்டன் ஃப்ரீடம் அணி தரப்பில் லோக்கி ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளையும், நேத்ராவல்கர், மேக்ஸ்வெல், ஜேக் எட்வர்ட்ஸ், ஹொலண்ட் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.