
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் எம்ஐ நியூயார்க் அணி நடப்பு சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்காஸ் அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 4 ரன்னிலும், அடுத்து களமிரங்கிய ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷயாம் ஜஹாங்கீர் - கைல் மேயர்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.
இதில் இருவரும் 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜஹாங்கீர் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த கைல் மேயர்ஸ் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 3 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களுடன் 88 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் கேப்டன் ஹென்ரிச் கிளாசென் 27 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சியாட்டில் ஆர்காஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது.