MLC 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகர்ன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியிலும் சியாட்டில் ஆர்காஸ் அணி தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு எம்எல்சி தொடரில் தொடர்ச்சியாக 5ஆவது தோல்வியைத் தழுவி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் சீயாட்டில் ஆர்காஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணியில் ஃபின் ஆலன் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் மேத்யூ ஷார்ட் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மெக்குர்க் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்னிலும், அரைசதம் கடந்து அசத்திய மேத்யூ ஷார்ட் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹசன் கான், சேவியார் பார்ட்லெட், ஹாமில்டன் உள்ளிட்டோர் சோபிக்க தவறிய நிலையில், 6ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரொமாரியோ ஷெஃபெர்ட் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. ஆர்காஸ் அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி மற்றும் ஹர்மீத் சிங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.