
MLC 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியிலும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு எம்எல்சி தொடரில் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணிக்கு உன்முக்த் சந்த் மற்றும் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் உன்முக்த் சந்த் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ஃபிளெட்சர் சதமடித்து அசத்திய நிலையில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 104 ரன்களைச் சேர்த்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியான் திரும்பினார். அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஷெர்ஃபேன் ரூத்ரஃபோர்ட் 20 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 30 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களைச் சேர்த்தது. வாஷிங்டன் ஃப்ரீட்ம் தரப்பில் இயான் ஹாலண்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.