
அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் - வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் ஜேசன் ராய் 7, உன்முகுந்த் சந்த் 18, குமார் 9, ஜஸ்கரன் மல்ஹோத்ரா 12 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ரைலீ ரூஸோவ் - ஆண்ட்ரே ரஸல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் ரூஸோவ் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 71 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது.